Tuesday, June 9, 2009

டி.ஆருடன் ஒரு கொடுமையான சந்திப்பு



சிலதினங்களுக்கு முன்பு கே டிவியில் நமது விஜய.டி.ஆரின் வீராசாமி படம் பார்த்தேன்.சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு. அந்த அளவுக்கு அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்ப காமெடியாக இருந்தது. அதனால இந்த முறை அவர வச்சு கலாய்க்கலாம்னு முடிவு பண்ணினேன். நம்ம டி.ஆரை சிஎன்என் ஐபிஎன்னில் வரும் ராஜ்டீபை வைத்து பேட்டி எடுக்கவிட்டா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

ராஜ்தீப் : இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தினத்தில் நாம் ஒரு விஐபியை பேட்டி காணப் போகிறோம். சுற்றுச்சூழல் தினத்திற்கும் இந்த விஐபிக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். அதை நான் நிகழ்ச்சியின் முடிவில் சொல்கிறேன்.நம்முடைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வி.ஐ.பி பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.இவரை பார்க்கும் போது குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் கோட்பாடு தவறானோதோ, ஏன் கரடியிலிருந்து தோன்றியிருக்கக் கூடாது? என சில நேரங்களில் எண்ணத் தோன்றும். சமிபத்தில் வெளிவந்து நமது எல்லோரையும் மகிழ்வித்த காமெடி படமான வீராசாமியின் கதாநாயகன்.இவரே ஒரு கொடுமையான ஆசாமி இவரது மகன் இவரைவிட மிகக் கொடுமையான ஆசாமி. நான் இன்று பேட்டி காணப் போகும் விஜய.டி.ராஜேந்தரைப் பற்றி உங்களுக்கு மேலும் அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன் .

(ராஜ்தீப் சொல்லிக்கொண்டிருக்கும்போது புயல் போல உள்ளே நுழைகிறார் டி.ஆர்)
டி.ஆர் : Sorry for the Interruption

This is only my introduction

During the cross examination

You will see my action and Direction.

Added with Perfection.

ராஜ்தீப் : சார் இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இங்கிலீச கடிச்சு துப்புறீங்க.

டி.ஆர் : Dont get Emotion and irritation

you wait and see my further action.

ராஜ்தீப் : ஸ் அப்பா ... ஓப்பனிங்லயே கண்ணைக்கட்டுதே. சார் முதல்ல வீராச்சாமி படத்தப் பற்றி ரசிகர்களுக்கு ஏதாவது சொல்லுங்க.

டி.ஆர் : தமிழ் சினிமாவுல இந்த மாதிரி ஒரு காவியக் காதல் இதுவரை வந்தது கிடையாது. ஒரு லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜுலீயட் மாதிரி இனிமே டிஆர்- மும்தாஜ் ஜோடியும் வரலாற்றில் இடம் பெரும். அப்படின்னா இது காதல் படமா சார்னு நீங்க கேட்டா இது காதல் படம் மட்டும் அல்ல. இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாம் டூப் இல்லாம போட்டிருக்கிறேன்.

ராஜ்தீப் : (இடைமறித்து) சார் சார் ரீல் அந்துடப்போகுது. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி மனப்பாடம் பண்ணுனதையை இன்னும் ஒப்பிக்கிரீங்களே சார். அதான் படம் வந்து ஒரு ஷோ கூட உருப்படியா ஓடாமா மறுபடியும் பெட்டிக்குள் போயிடுச்சே.

டி.ஆர் : யாரு சொன்னா அப்படி ?

ராஜ்தீப் : அதான் இண்டர்நெட்டுல எல்லாம் நாரடிக்கிறாங்களே.

டி.ஆர் : (டென்சனாகி) என் படம் நல்லா ஓடலேன்னு சொல்ல நீ யாரு மேன். இன்னைக்கு வரைக்கும் சன் டிவில இருபது தடவை போட்டிருக்காங்க. நல்லா இல்லாத படத்தையா இத்தனை தடவை போடுவாங்க.படத்த பார்த்த என் ரசிகனுங்க எல்லாம் அண்ணே உங்களுக்கு இந்த படத்துக்கு கண்டிப்பாக ஆஸ்கார் அவார்டு கிடைக்கும்னு சொல்றாங்க. வார்த்தையை அளந்து பேசு.

ராஜ்தீப் : இல்ல சார் இந்த படத்தை பார்த்த சில பேர் 'KINGKONG' படத்தை தமிழில் பார்ப்பது போல இருந்தது என்கிறார்களே?

டி.ஆர் : You are Oppressing,Depressing and Suppressing the feelings of Tamilans.நீ கூட தான் எங்க ஊரு வசந்த் அண்ட் கோ ஓனர் கோர்ட்ஐ போட்டுக்கிட்டு ஊட்டில பிச்சை எடுக்கிறவன் மாதிரி இருக்கிறன்னு மக்கள் சொல்கிறாங்க. செய்திகளை சுவாரசியமா சொல்லுற பேர்வழின்னு குட்டி போட்ட குரங்கு குட்டி மாதிரி குதிச்சு குதிச்சு பேசுற. அதயெல்லாம் நாங்க கேட்குறோமா?.

ராஜ்தீப் : ஏன் சார் இப்படி அறிவுகெட்டத்தனமா பேசுறிங்க?

டி.ஆர் : (கடுப்பாகி) யாரப்பாத்து அறிவு இல்லாதவன்னு சொல்லுற. அப்ப ஏன் அறிவு இல்லாதவன பேட்டி எடுக்க வந்த. அறிவு இல்லாதவன்ன பேட்டி எடுக்க வந்த நீ அறிவு இல்லாதவனா ? இல்ல நான் அறிவு இல்லாதவனா? கையுல மைக்கு இருக்குதுங்கிறதுக்காக என்ன வேணாலும் கேட்கக்கூடாது? c'mon tell me man?

ராஜ்தீப் : சாரி சார் மன்னிச்சுக்கோங்க

டி.ஆர் : Dont Say Sorry

I am not a Lorry

To carry your Sorry

ராஜ்தீப் : சரி சார் அதவிடுங்க. எங்களுக்குக்காக உங்களோட அடுக்கு மொழி வசனம் ஒன்ன எடுத்து விடுங்க சார்.

டி.ஆர் : என் தங்கை கலியாணி

ஊசிப் போன சாப்பிட முடியாது பிரியாணி.

ராஜ்தீப் : ஆகா அருமை. இன்னொன்னு சொல்லுங்க சார்.

டி.ஆர் : என் தங்கை கலியாணி

ஊசிப் போன சாப்பிட முடியாது பிரியாணி.

ராஜ்தீப் : என்ன சார் வேற சொல்ல சொன்னா திரும்ப அதையே சொல்லுறீங்க.

டி.ஆர் : ஏய் முதல்ல சொன்னது சிக்கன் பிரியாணி. இப்ப சொன்னது மட்டன் பிரியாணி.ஏய் டண்டனக்கா ஏய் டனக்குடக்கா.

ராஜ்தீப் : பின்னுறீங்க போங்க சார். அப்புறம் உங்க மகன் சிம்புவைப் பத்தி சொல்லுங்க சார்.

டி.ஆர் : கடையில விக்குது பன்னு

சிம்பு என்னோட மூத்த சன்னு தேவையில்லாம அவன எதிர்த்து நின்னு நீ தலையில போட்டுக்காத மண்ணு.

ராஜ்தீப் : (தலையில அடித்துக் கொண்டு ) சத்தியமா இந்த மாதிரியெல்லாம் கவிதை சொல்ல உங்களை விட்டா வேற ஆளு கிடையாது.

டி.ஆர் : (தொடர்கிறார்) மீன் குட்டிக்கு நீந்த யாரும் கத்துக் கொடுப்பதில்லை. மான்க்குட்டிக்கு ஓட யாரும் கத்துக் கொடுப்பதில்லை. அதுபோலத் தான் சிம்புவுக்கும். அவனுக்கு நாதாரித்தனமாக பேசுவதற்கு யாரும் கொடுக்கத் தேவையில்லை. நாதரித்தனமா பேசுவது, பிக்காளித்தனம் பண்ணுவது எல்லாம் எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது.

ராஜ்தீப் : இப்படி திறந்த புத்தகமா இருக்குறீங்களே சார். அப்புறம் அடுத்து என்ன படமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

டி.ஆர் : காக்க காக்க ஸ்டைல்ல ஒரு போலிஸ் ஸ்டோரி பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுக்காக எக்ஸ்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்ப ட்ரிம் பண்ணியிருக்கேன்.அப்புறம் இந்த படத்துக்காக நான் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்கப்போறேன்.

ராஜ்தீப் : (மனதிற்குள்) ரைஸ் பேக் (Rice Bag) மாதிரி உடம்ப வச்சிக்கிட்டு இவரெல்லாம் சிக்ஸ் பேக் பத்தி பேசுகிறார்.கேடி பக்கிரி மாதிரி இருந்துகிட்டு இதெல்லாம் போலீசா நடிச்சி எத்தனை பேரு குடியைகெடுக்கப்போகுதோ.

ராஜ்தீப் : அப்புறம் சினிமாவுல உங்களுக்கு போட்டியா யார நீங்க நினைக்குரிங்க.

டி.ஆர் : ரஜினி, கமல் எல்லாம் ரொம்ப ஓல்டாயிட்டாங்க. அஜித்,விஜய்க்கெல்லாம் என் அளவுக்கு டேலன்ட் கிடையாது. தனுஷ் அவன் ஒரு சுண்டைக்காய். சிம்பு எனது வாரிசு அதனால அவன போட்டியா கருத முடியாது.என்னோட அளவுக்கு அழகு,அறிவு,திறமை,இளமை இல்லாங்காட்டியும் சூர்யாவைத் தான் எனக்கு போட்டியா நான் நினைக்கிறேன்.அதனால சூரியா ஸ்டைல்லயே படம் எடுக்கப்போறேன். "வாரணம் ஆயிரம்" மாதிரி "வானரம் ஆயிரம்" , "காக்க காக்க" மாதிரி "கொக்கு கொக்கு" ன்னு வரிசையா படமா எடுத்து தள்ளப் போறேன்.

ராஜ்தீப் : இத மட்டும் சூரியா அப்பவே கேட்டிருந்தார்ந்னா அயன் படம் எடுக்கும்போது உங்களையும் ஆப்பிரிக்கா கூட்டிட்டு போயி அங்க உங்க கூட்டத்தோட சேர்த்து விட்டிருப்பார்

டி.ஆர் : (ஆவேசமாக எழுந்து )கும்தலக்கடி கும்மா இத வாங்கிகோடா சும்மா
என்று ராஜ்தீப் மூக்கில் ஒரு குத்து விட்டுவிட்டு அரங்கத்தைவிட்டு எழுந்து செல்கிறார்.

ராஜ்தீப் : (மூக்கைத் தடவியபடி) நான் ஏற்கனவே சொன்னதுபோல் இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தினத்தில் நாம் இயற்கையை பாதுகாக்க, காடுகள் அழிவதை தடுக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இப்பப் பார்த்தமாதிரி தான் காட்டுக்குள் இருக்கவேண்டியதுகள் எல்லாம் நாட்டுக்குள் புகுந்து நமக்கு தொந்தரவு கொடுக்கும். காடுகள் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் இதுகள் எல்லாம் தத்தமது குருப்போடு ஜாலியாக இருந்திருக்கும். நாமும் இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆகவே நேயர்களே காடுகள் அழியாமல் பாதுகாத்து இதுபோன்ற இம்சைகளில் இருந்து தப்பித்துகொள்ளுங்கள்.இந்த நிகழ்ச்சியை இத்துடன் நாம் முடித்துக்கொள்வோம். இல்லாவிடில் அந்த ஆள் திரும்பி வந்து அவரது மகன் பாணியில் "எனக்கு கேமராவுக்கு முன்னாடி தான் சார் நடிக்கத் தெரியும். கேமராவுக்கு பின்னாடி நடிக்கத் தெரியாது" ன்னு அழுது ஒப்பாரி வைத்தாலும் வைப்பார். ஆகவே நன்றி வணக்கம்.

(பி.கு) நீங்கள் உங்கள் கவலைகளை எல்லாம் மறந்து வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா?. youtube.com வலைத்தளத்திற்கு சென்று (CTS நெட்வொர்க்கில் இருந்து முயற்சிக்க வேண்டாம்) 'TR the Terrror' என்ற சொல்லை வைத்து தேடுங்கள்.அதில் 'India Glitz' க்கு டி.ஆர் கொடுத்த பேட்டி மற்றும் டி.ஆரின் பிரஸ்மீட் பேட்டி ஆகியவற்றை கண்டிப்பாக பாருங்கள். சத்தியமா சொல்றேன் அந்த மாதிரி நீங்க வாழ்க்கையில சிரிச்சிருக்கவே மாட்டிங்க.ஓவரா சிரித்து உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதற்க்கு நான் பொறுப்பல்ல.

Wednesday, June 3, 2009

விஜய்யின் ஐம்பதாவது பட டிஸ்கசன்



விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'வேட்டைக்காரன்' படம் அவரது 49 வது படமாம். அடுத்து வெளிவரப்போகும் தனது 50 வது படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக கதை டிஸ்கசன் செய்வதற்கு தனது ஆஸ்தான டைரக்டர்கள் ஆன பேரரசு,பிரபு தேவா இவர்களோடு பாலா,அமீர், சேரன் ஆகியோரையும் அழைத்து இருந்தார். விஜய்யின் P.A வும் உடன் இருந்தார்.அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது கிடைத்தவை இவை. (இது முழுக்க முழுக்க கற்பனையே. இது கண்டிப்பாக யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை ஆகவே படித்து சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்)

விஜய : எல்லோருக்கும் வணக்கம்ணா. எப்படியோ அடிச்சி புடிச்சி நானும் 49 படம் நடித்துவிட்டேன். அடுத்த படம் நம்மளோட 50 வது படங்கன்னா. அதான் உங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கிறேன். எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது கதை இருந்தா சொல்லுங்கண்ணா நாம படம் பண்ணலாம்.

டைரக்டர்கள் : (மனதிற்குள்) உன் படத்துக்கெல்லாம் எதுக்குடா கதை. உன்னோட எந்த படத்துல கதை இருந்திருக்கு.

விஜய் : பிரபுதேவா சார் நீங்க மொதல்ல சொல்லுங்க.

பிரபு : போக்கிரி படத்துல உங்களை போலீசாக காட்டியாச்சு. வில்லு படத்துல உங்கள ராணுவ மேஜர் ஆக காட்டியாச்சு. அதனால இந்த படத்துல உங்கள "Interpol Officer " ஆக காட்டாலம்னு இருக்கேன்.

விஜய் : "Interpol Officer" ஆ குட் மேலச் சொல்லுங்க.

P.A : சார் ஏற்கனவே வில்லு படம் பார்த்தவங்க எல்லாம் உங்க ராணுவ மேஜர் கெட்டப்ப அவங்க தெரு கூர்க்கா கெட்டப்போட மேட்ச் பண்ணி உங்களை நாரடிச்சாங்க. இப்ப "Interpol Officer " ஆ வேணாம் சார்.

விஜய் : இருய்யா கதை என்னன்னு கேட்போம். பிரபு படத்தோட பெயர் மற்றும் கதையை ரெடி பண்ணீட்டிங்களா?

பிரபு : நம்ம காம்பிநேஸன்ல ஏற்கனவே வந்து வெற்றி அடைந்த படம் போக்கிரி. ஸோ இந்த படத்திற்கு நாம பக்கிரின்னு பெயர் வைக்கலாம். உங்க ஹேர் ஸ்டைல்க்கும் இந்த பெயருக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும்.மேலும் Opening song உம் ரெடி பண்ணீட்டேன். கேளுங்க

( போக்கிரி ஸ்டைலில் பாடவும் )

ஓடுங்கடா தியேட்டரை விட்டு
நான் செவென் ஒ' கிளாக் மொட்ட பிளேடு
பேசப் போறேன் பன்ச் டயலாக்கு
நீ காதைக் கொஞ்சம் மூடி கோடா

P.A : சார் இந்த ஆளு ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல.ஏற்கனவே இந்த ஆளோட அண்ணன் அஜித்தை வச்சு ஏகன் படம் எடுத்து அவரை மூளைல உக்கார வச்சுட்டாரு. இவனோ ஏற்கனவே உங்களை வச்சு வில்லு படம் எடுத்து உங்களை காமெடி பீஸாக்கிட்டான். குடும்பமே குருப்பாத் திரியுரானுங்க ஜாக்கிரதை.

விஜய் : (அதுவும் சரிதான்யா) பிரபு நீங்க கொஞ்சம் வெளியில வெய்ட் பண்ணுங்க. நான் பேரரசு கிட்டயும் கதை கேட்டுக்கிறேன். நீங்க சொல்லுங்க பேரரசு உங்க கதையை.

பேரரசு : சார் படத்தோட பெயரை கோமாளிப்பட்டி ன்னு வைக்கலாம்னு இருக்கேன்

விஜய் : என்னது கோமாளிப்பட்டியா ? யோவ் சும்மாவே நான் டான்ஸ் ஆடுறதப் பார்த்து நிறையபேரு என்ன கோமாளி மாதிரி ஆடுறான்னு சொல்றாங்க. இந்த லட்சணத்துல இப்படி ஒரு பெயர் தேவையா.

பேரரசு : இல்ல சார். வழக்கமா நான் ஏதாவது ஊரோட பேரைத்தான் என்னோட படத்துக்கு தலைப்பா வைப்பேன். போன வாரம் எங்க ஊருக்கு போகும்போது இப்படி ஒரு ஊர்ப்பெயரைப் பார்த்தேன். அந்த பெயரைப் பார்த்ததும் எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. அப்பவே முடிவு பண்ணீட்டேன். உங்களை வச்சு மறுபடியும் படம் எடுத்ததா இந்த பெயரைத் தான் வைப்பதென்று.

விஜய் : எல்லாம் என் நேரம்யா. நீ எல்லாம் என்ன நக்கல் பண்ற அளவுக்கு என்னோட நிலைமை மோசமாயிடுச்சு. சரி கதையை சொல்லித் தொலை.

பேரரசு : கதை என்ன சார் சுண்டைக்காய் கதை. "Opening song" ஆ நானே எழுதியிருக்கிறேன் இத முதல்ல கேளுங்க.

(கில்லி ஸ்டைலில் படிக்கவும்)

செருப்ப எடுத்து ஒளிச்சி வைடா வைடா
விளக்கமார எடுத்து மறைச்சி வைடா வைடா
என் படத்த பார்த்து கண்ணா பின்னான்னு திட்டாதடா
ஏய் கோமாளி.. ஏய் கோமாளி.. நான் கோமாளி டா

விஜய் : பாரு எவனாவது படத்தோட கதையை சொல்றாங்களா. ஆனா opening song ஆ மட்டும் எழுதி வச்சிக்கிட்டு வெறுப்பேத்துறாங்க.

P.A : பாஸ் இதெல்லாம் நமக்கு புதுசா என்ன. அப்பப்ப ஷூட்டீங்குல என்ன தோணுதோ அதத்தான படம் எடுத்து மக்களை கொல்றோம்.

விஜய் : சரி சரி உண்மையச் சொல்லாத. இந்தப் பேரரசுப் பய என்ன ஓவரா நக்கல் பண்ணீட்டான். அவன நீ மேல உள்ள ரூமிற்கு கூட்டிட்டு போயி சேர்ல கட்டிப்போட்டு நான் நடிச்ச 48 பட DVD யையும் போட்டுக் காட்டு.

P.A : கொலைக் கேசுல உள்ள போயிருவிங்க பரவாயில்லையா?

விஜய் : ஒ அப்படி ஒன்னு இருக்குல்ல. சரிவிடு இவன அப்புறம் பார்த்துக்கலாம். சேரன் சார் நீங்களாவது கதையைச் சொல்லுங்க

சேரன் : விஜய் உங்க வாழ்க்கையில நீங்க சந்தித்த நான்கு பெண்களின் பற்றின கதை.

P.A : சார் இவனுக்கு ஆட்டோகிராப்புல இருந்து இதே வேலையத் திரியுறான். மீதி கதையை நானே சொல்வேன். உங்க தலை முடிய நல்லா படிய வாரிவிட்டு உங்களுக்கு ஒரு கண்ணாடிப் போட்டுவிடுவான். அப்புறம் ஒவ்வொரு பெண்களாக நினைத்து நீங்க கண்ணாடிய கழ்ட்டி கண்ணீர் விடுவதுதான் கதை. ஏற்கனவே உங்க படங்கள பார்த்து மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகுறாங்க.இந்த லட்சணத்துல நீங்களும் அழுதா பார்க்கவே சகிக்க முடியாது.

விஜய் : அமீர் சார் உங்க கதை.

அமீர் : பருத்தி வீரன் ஸ்டைல்ல ஒரு சூப்பர் கிராமத்து சப்ஜெக்ட் இருக்கு. ஆனா அதுக்கு நீங்க கெட்டப் மாத்தவேண்டியிருக்கும்.

விஜய் : நான் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்துக்காக கெட்டப் எல்லாம் மாத்திதான் நடித்து வருகிறேன்.

அமீர் : அப்படி என்ன கெட்டப் சார்.

விஜய் : சஸ்பென்ஸ்சாக இருக்கட்டும்னு பார்த்தேன் சரி இருந்தாலும் சொல்கிறேன். இந்த படத்துல நான் புல்லா மீசை வச்சு நடிக்கிறேன். வேணும்னா உங்க படத்துல மீசையை எடுத்து புது கெட்டப் பண்ணீடலாம்.

( இதைக் கேட்டு அமீர் மயக்கம் போட்டு கிழே விழுகிறார். இந்த கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாலா சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறார் )

விஜய் : என்னையா எல்லாரும் இப்படி தெறிச்சு ஓடிட்டானுங்க.

P.A : பேசாம நீங்க உங்க அப்பாவை வைச்சே படம் எடுக்கலாம். அவர்தான் உங்களை பற்றி நன்றாக தெரிந்து வைத்து படம் எடுப்பவர்.

விஜய் : என்னையா சொல்ற ?

P.A : ஆமாம் உங்க ஆரம்ப காலப் படங்களான ரசிகன்,விஷ்ணு போன்ற படங்களில் உங்களை நம்பி படம் எடுத்தால் கண்டிப்பாக படம் ஊத்திக்கும்நு தெரிஞ்சி ஹீரோயின் நம்பி படம் எடுத்து வெற்றி அடையச் செய்தவர். அதனால அவரையே டைரக்டராகப் போடலாம். அப்புறம் மறுபடியும் சங்கவியை உங்க படத்துல நடிக்க கூப்பிடலாம். அப்புறம் நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா " டைப்புல ஒரு கருத்து பாட்டு பாடி ஸ்க்ரீன்க்கு கிழே இந்த தத்துவப் பாடலைப் பாடி கொண்டிருப்பவர் உங்கள் விஜய்ன்னு போட்டு அசத்தலாம். படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டுதான்.

விஜய் : அதுவும் சரிதான்.

தோரணை - விமர்சனம்


விஷாலின் சூப்பர் மொக்க படமான சத்யம் படத்திற்கு பின்பு வந்திருக்கும் படம். படத்தின் கதை இதுதான். விஷாலின் அண்ணன் சிறுவயதில் அம்மா திட்டியதற்காக ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். விஷால் வளர்ந்து பெரியவனானதும் இந்த இத்துப்போன பிளாஷ்பேக்கை சொல்கிறார் அழுகாச்சி அம்மா கீதா. அண்ணனை தேடி கண்டுபிடிப்பதற்காக சென்னை வருகிறார். ( சின்ன வயசுல ஓடிபோரவங்க எல்லாம் சென்னைக்கு தான் வரவேண்டும் என்பதுதானே நமது தமிழ் சினிமாவின் நியதி).

அங்கு அண்ணனை தேடும் நேரம் போக மீதி நேரங்களில் ஷ்ரியாவை காதல் செய்கிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் எல்லாம் எப்படிதான் இப்படி சொல்லி வச்சமாதிரி லூசுத்தனமா இருப்பாங்களோ? . அப்புறம் ஒருவழியா விஷால் அவரது அண்ணனை கண்டுபிடித்து விடுகிறார். அவர்தான் கிஷோர். சென்னையை கலக்கும் மிகப்பெரிய ரவுடி. அவரது எதிர் கோஷ்டி பிரகாஷ் ராஜ். இவர்கள் இருவரும் தங்களை மிகப்பெரிய ரவுடியாக வாலண்டரியாக காட்டிக்கொள்கிறார்கள்.

அப்புறம் பஞ்ச் டயலாக்குகள் , கருத்துகள் என பலவகைகளில் படம் பார்ப்பவர்களை சித்திரவதை செய்து பிரகாஷ்ராஜிடமிருந்தும், போலீஸ் எந்கௌன்டரிலிருந்தும் விஷால் அவரது அண்ணனை காப்பாற்றி ஊருக்கு திரும்ப கூட்டிச் செல்வதுதான் மீதி கதை.அப்புறம் தோரணைன்னு ஏன் பேர் வச்சிங்கன்னு யாரும் கேட்டுற குடாது என்பதற்காக இடைவேளைக்குப் பிறகு ஆளாளுக்கு ஒரு முறையாவது தோரணை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி நம்மை இம்சிக்கிறார்கள்.

படத்தின் ஒரே பிளஸ் பாயின்ட் சந்தானம் காமெடி. மைனஸ் பாயின்ட் மீதி எல்லாம். அழுகாச்சி அம்மா, லூசுத்தனமான ஹீரோயின், அரைவேக்காடு வில்லன் குருப், டுபாக்கூர் பிளாஷ்பேக், கன்னாபின்னான்னு பன்ச் டயலாக் (நீ அடிச்சா பணம், நான் அடிச்சா நீ பொணம்) என கிட்டத்தட்ட ஒரு விஜய் படம் பார்த்த எபெஃக்ட் இருந்தது. போகிறப் போக்கைப்பார்த்தால் விஜய்க்கு போட்டியா விஷால் வந்துவிடுவார் போல (நம்மை கிச்சுகிச்சு மூட்டுவதற்கு).

மரியாதை - விமர்சனம்


இந்த படத்தை நான் பார்த்தேன் என்று சொல்வதைவிட பார்க்க வைக்கப்பட்டேன் என்று சொல்வதே சரியானது. எங்க டீமில் இருந்த சில விசமிகள் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொண்டதால் நானும் வேறுவழியின்றி செல்ல வேண்டியதாயிற்று. (இந்த படத்த பார்க்க ஐநாக்ஸ் போகப்போகிறேன் என என் ரூம்மேட்டிடம் நான் சொன்னபோது அவன் என்னை ரொம்ப கேவலமாக பார்த்தான்.

பொதுவாக விஜயகாந்த் படங்களில் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் ரொம்ப கடுப்பாயிருக்கும் ஆனா சீரியஸ் காட்சிகள் எல்லாம் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இது விக்ரமன் படங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக வானத்தை போல படத்தில் வீடு ஒழுகி தன் தம்பிகள் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக பெரிய விஜயகாந்த் தன் மடியில் தம்பிகளைஎல்லாம் உக்காரவைத்து பெரிய கூடையை தன் தலைமேல் பிடித்துக்கொண்டு தன் தம்பிகளை மழையிலிருந்து காப்பாற்றும் காட்சி. இந்த காட்சியை நினைக்கும்போதெல்லாம் சிரித்து சிரித்து வாயே வலித்திருக்கிறது.
அந்த மாதிரி இந்த படத்திலயும் ஏதாவது சீரியசான(!) காட்சிகள் ஏதாவது இருக்கும் என என்னை நானே தேற்றிக்கொண்டு ஒரு வழியாக படம் பார்க்கச் சென்றேன். சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி ஒரு கேவலமான படத்தை என் எதிரி கூட பார்க்கக்கூடாது. எப்படித்தான் மனசாட்சியே இல்லாமல் இந்த மாதிரி ஒரு படம் எடுக்கிறாங்களோ?. அதுவும் விஜயகாந்த் முகத்தை அடிக்கடி க்ளோஸ்-அப்பில் வேறு காட்டி நம்மை அநியாயத்திற்கு கொடுமைப்படுத்துராங்க. அதாவது பரவாயில்லை "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" ரீ மிக்ஸ் பாடலை சமாதியில் இருக்கும் M.G.R. மட்டும் கேட்டார்ன்னா மியுசிக் டைரக்டரை பீச் ரோட்டில் ஓட ஓட விரட்டி அடிப்பார்.

இதற்க்குமேல் இந்த படத்தைபற்றி எதுவும் கேட்காதிர்கள். மானம் மரியாதை உள்ளவர்கள் தயவு செய்து இந்தப் படத்தை தவிர்க்கவும்.

Monday, May 4, 2009

சாதிப்பாரா சரத்பாபு ?



நமது நாட்டில் அரசியல்வாதியாக என்ன தகுதிகள் வேண்டும். வெள்ளை வெளேர்ன்னு கட்சி கரை வேட்டி கட்டியிருக்க வேண்டும். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் சென்றிருக்க கூடாது. யாராவது படிப்பைப் பற்றிக் கேட்டால் காமராஜர் படித்தவரா? எம்.ஜி.ஆர் எந்த யுனிவர்சிட்டில படித்தார்? என பதில்க் கேள்வி கேட்டு உதார் விட தெரிந்திருக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து பொதுக்கூட்டம் போட்டு மாற்று கட்சியினரை எவ்வளவு அசிங்கமாக திட்ட முடியுமோ அவ்வளவு அசிங்கமாக திட்ட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல் துலக்கும் பிரஷிலிருந்து வீட்டை சுத்தம் செய்யும் விளக்கமார் வரை அனைத்தும் இலவசமாக தருவோம் என வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும். இந்த மாதிரியெல்லாம் ஏதாவது புதுமை செய்தால்தான் மக்களே இவர்களை அரசியல்வாதிகள் என நம்புகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியெல்லாம் உதார்விடாத அரசியல்வாதி ஒருவர் இந்தமுறை தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சரத் பாபு. IIT BITS, Pilani யில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு MBA படிப்பை IIM Ahmedabad யில் முடித்துள்ளார். Software Engineer ஆக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பப் பின்னணியில் வந்த இவர் தெளிவான கொள்கைகளை முன் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு http://sarathbabu.co.in/in என்ற இவரது இணையத் தளத்தைப் பார்க்கவும்.

Saturday, May 2, 2009

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்


நமது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கனடாவில் வசிக்கும் தமிழ் சகோதரி ஒருவர் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்க்காக.

Subject: முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

To: முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

ஐயா முதல்வர் ஐயா,

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.


"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை. நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன்.


இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன். நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம். உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி.


இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய? பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது. இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.


உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை. இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா?


நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள். ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான். "ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.


உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா.


"இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.


ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.


தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.


என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.



வாழ்க தமிழ்

வெல்க தமிழர்

தமிழர்தான் புலிகள்

புலிகள்தான் தமிழர்

எவர் வந்து தடுத்தாலும் விரைவில் மலரும் தமிழீழம்


இப்படிக்கு,

ஒரு தமிழிச்சி


நான் மற்றும் நம்மில் பலர் மனதில் மனதில் நினைத்த பல விசயங்களை இந்த கடிதத்தில் சகோதரி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது மானம்கெட்ட அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் உரைக்குமா?

Wednesday, April 8, 2009

அயன் பட விமர்சனம்


எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். தமன்னாவையும் ஓரளவு பிடிக்கும். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அயன் படத்தைப் பார்ப்பதற்கு என்னுள் சிறு தயக்கம் இருந்தது. ஏனெனில் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். இருக்கிற மொக்கைப் படத்தையெல்லாம் விலைக்கு வாங்கி சன் டிவியின் எல்லா சேனல்களிலும் விளம்பரம் செய்து மக்களை வலுக்கட்டாயமாக பார்க்கவைப்பது இவர்கள் வாடிக்கை. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வந்த படிக்காதவன் மற்றும் தெனாவட்டு படங்களை பார்த்தபிறகு ஏற்பட்ட விழுப்புண்களே இன்னும் ஆறவில்லை. ( இந்த லட்சணத்தில் சமிபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த தீ படம் டாப் டென்னில் முதல் இடம். இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது)
சூர்யாவா? சூரியனா ? (சன்) என என்னுள் நடந்த விவாத்தில் முடிவில் சூர்யாவே வென்றார். ஒருவழியாக அயன் படம் பார்க்கச் சென்றேன். சூர்யா என்னை ஏமாற்றவில்லை. அயன் படம் சன் பிக்சர்சின் மற்ற படங்களைவிட நன்றாகத்தான் உள்ளது.
படத்தில் ஏகப்பட்ட ஓட்டை இருந்தாலும் அதையும் மீறி எனக்கு பிடிக்க காரணம். சூர்யாவின் இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு (camera), சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள்.
சண்டைக்காட்சிகள், பாடல்கள், ரொமான்ஸ் என சூர்யா வழக்கம்போல் பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக காங்கோ நாட்டுத் தெருக்களில் நடக்கும் சண்டை காட்சிகள் ரொம்ப realistic ஆக இருந்தது. மிகைஇல்லாமல் நடிப்பது எப்படி என்பதை இவரிடம் விஜய் மற்றும் சிம்பு வகையறாக்கள் டியுசன் போகலாம்.
தமன்னா நடிக்க ஓரளவு முயற்சி செய்துள்ளார். பிரபு ஓகே. தமன்னாவுக்கு அண்ணனாகவும், சூர்யாவுக்கு நண்பனாகவும் வரும் ஜெகன் நன்றாக நடித்து உள்ளார். எல்லா பிகர்களுக்கும் இவரைப் போல் அண்ணன் இருந்தால் லவ் பன்ற பசங்களுக்கு பிரச்சனையை இருக்காது. ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். இவர் சூர்யாவிடம் தண்ணி அடித்துக் கொண்டே பேசும் டயலாக்கை வைத்தே அவர் பிற்பகுதியில் சாகாப்போகிறார் என்பதை கணித்துவிட்டேன்.
பாடல்கள் நன்றாக இருந்தாலும் சம்பந்தம் இல்லாமல் வருவதால் தியேட்டரில் அனைவரும் உச் கொட்டிவிட்டு தம் அடிக்க சென்றுவிட்டார்கள். அப்புறம் வில்லன் வழக்கமான தமிழ்ப்பட வில்லன்களைப்போல் காமெடி பீஸ்தான். ஆப்ரிக்கா மலைகள், மலேசியா கார் சேசிங் ஆகியவற்றில் ஒளிப்பதிவு சூப்பர்.
முதல்பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் போர் தான். மேலும் பல காட்சிகள் ஆங்கில படத்திலிருந்து சுட்டுள்ளார்கள் என உடன் வந்த நண்பன் கூறினான் ( குறிப்பாக பாதி ரூபா நோட்டைக்காட்டி காங்கோவில்ருந்து வைரம் கடத்தும் காட்சி). ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தக் காட்சிகள் புதிதாகவே இருந்தது. ஏனென்றால் நான் கடைசியாக பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே.

லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் 'Ayan is a Good Entertainer'.