Wednesday, April 8, 2009

அயன் பட விமர்சனம்


எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். தமன்னாவையும் ஓரளவு பிடிக்கும். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அயன் படத்தைப் பார்ப்பதற்கு என்னுள் சிறு தயக்கம் இருந்தது. ஏனெனில் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். இருக்கிற மொக்கைப் படத்தையெல்லாம் விலைக்கு வாங்கி சன் டிவியின் எல்லா சேனல்களிலும் விளம்பரம் செய்து மக்களை வலுக்கட்டாயமாக பார்க்கவைப்பது இவர்கள் வாடிக்கை. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வந்த படிக்காதவன் மற்றும் தெனாவட்டு படங்களை பார்த்தபிறகு ஏற்பட்ட விழுப்புண்களே இன்னும் ஆறவில்லை. ( இந்த லட்சணத்தில் சமிபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த தீ படம் டாப் டென்னில் முதல் இடம். இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது)
சூர்யாவா? சூரியனா ? (சன்) என என்னுள் நடந்த விவாத்தில் முடிவில் சூர்யாவே வென்றார். ஒருவழியாக அயன் படம் பார்க்கச் சென்றேன். சூர்யா என்னை ஏமாற்றவில்லை. அயன் படம் சன் பிக்சர்சின் மற்ற படங்களைவிட நன்றாகத்தான் உள்ளது.
படத்தில் ஏகப்பட்ட ஓட்டை இருந்தாலும் அதையும் மீறி எனக்கு பிடிக்க காரணம். சூர்யாவின் இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு (camera), சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள்.
சண்டைக்காட்சிகள், பாடல்கள், ரொமான்ஸ் என சூர்யா வழக்கம்போல் பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக காங்கோ நாட்டுத் தெருக்களில் நடக்கும் சண்டை காட்சிகள் ரொம்ப realistic ஆக இருந்தது. மிகைஇல்லாமல் நடிப்பது எப்படி என்பதை இவரிடம் விஜய் மற்றும் சிம்பு வகையறாக்கள் டியுசன் போகலாம்.
தமன்னா நடிக்க ஓரளவு முயற்சி செய்துள்ளார். பிரபு ஓகே. தமன்னாவுக்கு அண்ணனாகவும், சூர்யாவுக்கு நண்பனாகவும் வரும் ஜெகன் நன்றாக நடித்து உள்ளார். எல்லா பிகர்களுக்கும் இவரைப் போல் அண்ணன் இருந்தால் லவ் பன்ற பசங்களுக்கு பிரச்சனையை இருக்காது. ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். இவர் சூர்யாவிடம் தண்ணி அடித்துக் கொண்டே பேசும் டயலாக்கை வைத்தே அவர் பிற்பகுதியில் சாகாப்போகிறார் என்பதை கணித்துவிட்டேன்.
பாடல்கள் நன்றாக இருந்தாலும் சம்பந்தம் இல்லாமல் வருவதால் தியேட்டரில் அனைவரும் உச் கொட்டிவிட்டு தம் அடிக்க சென்றுவிட்டார்கள். அப்புறம் வில்லன் வழக்கமான தமிழ்ப்பட வில்லன்களைப்போல் காமெடி பீஸ்தான். ஆப்ரிக்கா மலைகள், மலேசியா கார் சேசிங் ஆகியவற்றில் ஒளிப்பதிவு சூப்பர்.
முதல்பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் போர் தான். மேலும் பல காட்சிகள் ஆங்கில படத்திலிருந்து சுட்டுள்ளார்கள் என உடன் வந்த நண்பன் கூறினான் ( குறிப்பாக பாதி ரூபா நோட்டைக்காட்டி காங்கோவில்ருந்து வைரம் கடத்தும் காட்சி). ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தக் காட்சிகள் புதிதாகவே இருந்தது. ஏனென்றால் நான் கடைசியாக பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே.

லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் 'Ayan is a Good Entertainer'.

Tuesday, April 7, 2009

மறக்கமுடியாத ரயில் பயணம்

கடந்த வாரம் எங்கள் ஊர் திருவிழாவிற்கு செல்வதற்கு முத்துநகர் expressல் டிக்கெட் புக் செய்து இருந்தேன். ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்குச் செல்வதற்கு சென்னையில் வசிக்கும் எங்கள் நண்பர்கள் மொத்தமாக நெல்லை expressல் புக் செய்து செல்வோம். ஏனெனில் திருவிழாவிற்கு செல்வதற்காக எங்கு இருந்தாலும் ( வெளிநாட்டில் இருந்தால் கூட ) சென்னை வந்து நெல்லை expressல் தான் எங்கள் நண்பர்கள் நிறைய பேர் வருவார்கள். சென்றவருடம் நானும் எனது நண்பர்களும் நெல்லை Expressல் விருதுநகர் சென்ற அனுபவத்தை இன்றும் மறக்கமுடியாது. ஒவ்வொரு கம்பர்ட்மென்ட்டாகச் சென்று நமக்கு தெரிந்த நபர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, யாராவது இருந்தால் அவர்களை தூங்க விடாமல் விடிய விடிய அரட்டையடித்தோம்.

ஆனால் இந்தமுறை நண்பர்கள் யாரும் வரவில்லை. மேலும் நெல்லை எக்ஸ்பிரஸ்சிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆகையால் முத்துநகர் எக்ஸ்பிரஸ்சில் தான் புக் செய்து இருந்தேன்.

வழக்கமாக ட்ட்ரைன்னில் எப்பொழுது தனியாக சென்றாலும், எனது கம்பர்ட்மென்ட்டில் வயதான கிழவிகள் அல்லது முழுக்க முழுக்க ஆண்களே நிரம்பி இருப்பார்கள். அது என் ராசியோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்த தடவை ட்ட்ரைன்க்கு வெளியே ஒட்டி இருக்கும் சார்ட்டை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஆம் எனக்கு அடுத்த சீட் தீபா வயது 24. ஆஹா இந்த தடவைதான் ஒரு பெண்னோடு கடலை போட்டுக் கொண்டு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது என மனதிற்குள் நினைத்தபடியே உள்ளே ஏறினேன்.

ட்ட்ரைன்னில் ஏறிய சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் வந்தாள். ம்ம் பார்ப்பதற்கு அந்தப் பெண் நன்றாகவே இருந்தாள். வண்டியும் சென்னையை விட்டு கிளம்பியது. எனக்கு எப்பொழுதுமே கொஞ்சம் starting trouble. எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என சிறிய தயக்கம். இருந்தாலும் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் நீங்களும் விருதுநகர்தானா ? எனக்கேட்டேன்.( சார்ட்டில் ஏற்கனவே பார்த்தாச்சுல!). அவளும் ஆம் என்றாள். உடனே நானும் விருதுநகர்தான் எனக்கூறி, நான் வேலை பார்க்கும் கம்பெனி அவள் வேலை பார்க்கும் கம்பெனி முதலியவற்றை பரஸ்பரம் தெரிந்து கொண்டோம். மேற்கொண்டு அவளிடம் பேசும்போது விருதுநகரில் அவளது வீடு எங்க வீட்டிற்கு நாலு தெருதான் தள்ளி உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டேன். இவ்வாறாக எங்கள் பேச்சு நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.

அப்பொழுது பக்கத்து compartmentலிருந்து ஒரு சிறுமி (2 வயது இருக்கும்), எங்கள் compartment வந்தாள்.வழக்கமாக இது போல் வரும் குழந்தைகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். ஆனால் இப்போது ஒரு பெண் பக்கத்தில் இருப்பதால் ஒரு ஹீரோயிசத்துக்காக அந்த சிறுமியை தூக்கிக்கொஞ்சினேன். கொஞ்சநேரத்தில் அந்த சிறுமி அழ ஆரம்பித்துவிட்டாள். சரி இறக்கி விடலாம் என நினைத்தபோது அந்த சிறுமி என்ன நினைத்ததோ வாயில் வைத்திருந்த பிஸ்கட்டை என் மீது துப்பிவிட்டது. இதைப்பார்த்து அந்த பெண் சிரித்தே விட்டாள். எனக்கெல்லாம் சரியான கோபம். இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்துக்கொண்டு இந்த குழந்தைகளே இப்படித்தான், இந்த மாதிரி குறும்புபன்ற பசங்களை எனக்கு ரொம்பப்பிடிக்கும் என அசடு வழிய அவளிடம் கூறினேன்.சட்டையை கழுவிவிட்டு வந்தால் செங்கல்பட்டு ஸ்டேஷன் வந்துவிட்டது.

அந்த ஸ்டேஷனிலிருந்து ஒரு பெரியவர் எங்கள் compartment லில் ஏறினார். இரண்டு பெரிய லக்கேஜ் கொண்டு வந்திருந்தார். நம்ம தான் பொண்ணுங்க முன்னாடி பெரியவர்களுக்கு உதவும் ஹீரோவாச்சே. அந்த பெரியவருக்கு லக்கேஜ் வைக்க உதவி செய்தேன். அத்தோடு விட்டிருக்கலாம் அவரிடம் போய் நீங்களும் விருதுநகர்தானா என ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுதான் நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தவறு என பின்பு தான் தெரிந்தது.

அவர் ஆமாம் நானும் விருதுநகர்தான் என ஆரம்பித்து அவர் போட்ட பிளேடு இருக்கே ஐயோ சாமீ மொக்க பிளேடு. அவர் படிக்குற காலத்துல ஆரம்பித்து அவர் செங்கல்பட்டு வந்த கதை, அவர் பாக்குற பிசினஸ் என அறுத்து எடுத்துவிட்டார். நானும் அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து அந்தப் பெண்ணிடம் கடலை போடலாம் என நினைத்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவேஇல்லை. இந்த லட்சணத்தில் அந்த பெரியவர்க்கு காது வேற சரியாக கேட்காது. நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கவே மாட்டார். அவர்தான் பேசிக்கொண்டே இருப்பார்.

மறுநாள் காலையிலும் எனக்கு முன்பே எழுந்து விட்டார். நான் ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து பேக்கை எடுத்து கொண்டு compartment வாசல் பக்கத்தில் வந்து நின்று கொண்டேன். அவள் இறங்கும்போது நாமும் அவளிடம் பேசிக்கொண்டே போகலாம் என நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது. விருதுநகரில் அவளை பிக்-அப் செய்வதற்கு அவள் அப்பா வந்திருந்தார். அப்புறம் என்ன கண்ணிலே ஒரு டாட்டா காண்பித்துவிட்டு என் விதியை நொந்தபடியே என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நம்ம யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் நமக்கும் மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்குது.

Cost Control - சில விபரீத யோசனைகள்




எங்கள் கம்பெனியில் Cost Control என்று சொல்லி நாங்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை பறித்துவிட்டார்கள். இந்த வேளையில் நாமும் நமது பங்கிற்கு சில Cost Control ஐடியாக்களை அள்ளி வழங்கலாம் என எஙகளது (me and my team) கற்பனை குதிரையை தட்டிவிட்டப்போது உருவானவை கீழ்க்கண்ட ஐடியாக்கள்.. ஆபீஸில் பொழுது போகாத சமயங்களில் இப்படி மொக்கத்தனமாக யோசிப்பது எங்கள் வாடிக்கை.

ஐடியா நம்பர் 1 :

ஏசி மற்றும் பேன்களுக்கு பதிலாக ஆளுக்கொரு விசிறி கொடுக்கலாம். மேலும் ப்ராஜெக்ட் மற்றும் சீனியர் மேனேஜர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக இரண்டு பணிப்பெண்களை வைத்து விசிரச் சொல்லலாம்.

ஐடியா நம்பர் 2 :
ஒவ்வொரு காபின்ற்கும் access card ற்கு பதில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வருவது போல ' அண்டா காகசம் அபூபாகூகும்' என்று சொன்னதும் கதவை திறக்குமாறு அடிமைகளை பழக்கப்படுத்தலாம். ' அண்டா காகசம் அபூபாகூகும்' போல் ஒவ்வொரு காபின்ற்கும் ஒவ்வொரு வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

ஐடியா நம்பர் 3 :
Tissue பேப்பர் மற்றும் டாய்லெட் பேப்பர்களுக்குப் பதில் தினத்தந்தியை வெட்டி வைத்து பயன் படுத்தலாம். இதிலும் அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் இருப்பதால் டாய்லடிற்கு வெளியில் ஒரு ஆளை நிக்க வைத்து போகும் முன்பு ஆளுக்கு ஓன்று மட்டும் கொடுக்கலாம்.

ஐடியா நம்பர் 4 :
டைனிங் ஹாலில் 10 சேர் மற்றும் ஒரு டேபிள் மட்டும் வைத்து விட்டு மீதி உள்ளவற்றை எடுத்து விடலாம். Music chair Competition நடத்தி வெற்றி பெறுபவர்கள் மட்டும் உக்கார்ந்து சாப்பிடலாம் மீதி நபர்களுக்கு கைஏந்தி பவன் தான்.

ஐடியா நம்பர் 5:
ஒவ்வொரு கேபின்னுக்கும் இண்டர்காமுக்குப் பதில் புதிய வார்ப்புகள் படத்தில் வருவது போல் தீபெட்டியை நூலில் கட்டிப் பேசலாம்.

ஐடியா நம்பர் 6 :
Associate களை பிக்அப் செய்வதற்கு பஸ்சுக்கு பதில் லாரியை அனுப்பலாம். காசும் கம்மி நிறைய பேரையும் ஏற்றலாம்.

ஐடியா நம்பர் 7 :
லைட்ஐ உபயோகப்படுத்தி பவர்ஐ வேஸ்ட் செய்வதற்குப் பதில் தீப்பந்தம், பெட்ரோமாக்ஸ் லைட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

ஐடியா நம்பர் 8 :
Internal courierகளை புறா காலில் கட்டி அனுப்பலாம். அதைக் கூட சில குறும்புக்கார ஆசாமிகள் சுட்டு சூப்பு வைத்து குடித்து விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே புறாக்களுக்கு பதிலாக காக்காவை பயன்படுத்தலாம்.

ஐடியா நம்பர் 9 :
சிக்கனத்தை கடைப்பிடிக்காமல் ஊதாரித்தனமாக திரியும் associate களுக்கு JKரித்தீஷ், விஜய டி. ராஜேந்தர் மற்றும் விஜய் படங்களை வலுக்கட்டாயமாக போட்டு காண்பித்து கொடுமைபடுத்தலாம்.
இந்த ஐடியாக்கள் எல்லாம் சிரிப்பதற்கு மட்டும்தான் சிந்திப்பதற்கு அல்ல.






ஓட்டு போடுவதன் அவசியம்



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நம் இந்திய திருநாட்டில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக தேர்தல் கருதப்படுகிறது. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களும் இந்தத் தேர்தலில் பங்கேற்று நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடுகிறேன், ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம்.
நாம் நினைத்தால் நிச்சயமாக மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும். ஓட்டு போடுவதற்கு முன் சில நிமிடங்கள் சிந்தித்து செயல்பட்டால் நிச்சயமாக இது சாத்தியமாகும்.

உங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது கல்வித்திறன், பொது வாழ்கை அனுபவம், அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து ஜாதி, மத அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்யாதிர்கள். மேலும் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி ஓட்டுப் போடாதீர்கள்.
இப்போதுள்ள கட்சிகளில் எந்த கட்சியும் சரியில்லை. பின்பு யாருக்கு ஓட்டு போடுவது என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறாக நினைத்து ஓட்டு போட தவறுவதால்தான் நிலைமை இவ்வளவு மோசம் அடைந்துள்ளது. உங்களது தொகுதியில் 10 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் 10 பேரும் கட்சி சார்பாக போட்டியிடுவதில்லை. சில நபர்கள் சுயட்சையாக தேர்தலை சந்திக்கலாம். அவர்களை பற்றி நன்கு விசாரித்து அவர்களை ஆதரிக்கலாம். நீங்கள் அவர்களை ஆதரிப்பதோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என 20 பேரிடமாவது அவருக்கு ஓட்டு போடா சொல்லலாம். மேலும் அவர்களையும் மேலும் 20 பேருக்கு பரிந்துரை செய்ய சொல்லலாம்.

இவ்வாறு செய்தல் மட்டும் அந்த நல்ல வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்றாலும் அவர் பெற போகும் ஓட்டுகள் மற்ற கட்சிகளுக்கு சிறு பயத்தையாவது உண்டாக்கும். நாமும் நல்லது செய்தால்தான் இந்த வெற்றி நிரந்தரமாக கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரும்.

சில நேரங்களில் எந்த வேட்பாளரும் சரி இல்லாமல் இருக்கலாம். அவ்வாறான சமயங்களில் ஓட்டு சாவடிக்கு சென்று படிவம் எண் 49 'O' ஐ வாங்கி எந்த வேட்பாளருக்கும் நீங்கள் ஓட்டு போட விரும்பாததை பதிவு செய்யலாம்.

நாம் நம் நாட்டில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என மனதளவில் நினைத்தால் மட்டும் மாற்றங்கள் தானாக நிகழாது. அந்த மாற்றங்கள் நிகழ நம்மாலான பங்களிப்பையும் நாம் அளிக்கவேண்டியது மிக அவசியம்.
ஆகவே கண்டிப்பாக தேர்தலில் ஓட்டு போடுங்கள். மேலும் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் காசு பணம் வாங்காமல், ஜாதி மத அடிப்படையில்லாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டுப் போட சொல்லுங்கள். மாற்றங்கள் நிகழ நாமும் நமது பங்களிப்பைக் கொடுப்போம்.