Tuesday, April 7, 2009

ஓட்டு போடுவதன் அவசியம்



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நம் இந்திய திருநாட்டில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக தேர்தல் கருதப்படுகிறது. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களும் இந்தத் தேர்தலில் பங்கேற்று நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடுகிறேன், ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம்.
நாம் நினைத்தால் நிச்சயமாக மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும். ஓட்டு போடுவதற்கு முன் சில நிமிடங்கள் சிந்தித்து செயல்பட்டால் நிச்சயமாக இது சாத்தியமாகும்.

உங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது கல்வித்திறன், பொது வாழ்கை அனுபவம், அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து ஜாதி, மத அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்யாதிர்கள். மேலும் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி ஓட்டுப் போடாதீர்கள்.
இப்போதுள்ள கட்சிகளில் எந்த கட்சியும் சரியில்லை. பின்பு யாருக்கு ஓட்டு போடுவது என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறாக நினைத்து ஓட்டு போட தவறுவதால்தான் நிலைமை இவ்வளவு மோசம் அடைந்துள்ளது. உங்களது தொகுதியில் 10 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் 10 பேரும் கட்சி சார்பாக போட்டியிடுவதில்லை. சில நபர்கள் சுயட்சையாக தேர்தலை சந்திக்கலாம். அவர்களை பற்றி நன்கு விசாரித்து அவர்களை ஆதரிக்கலாம். நீங்கள் அவர்களை ஆதரிப்பதோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என 20 பேரிடமாவது அவருக்கு ஓட்டு போடா சொல்லலாம். மேலும் அவர்களையும் மேலும் 20 பேருக்கு பரிந்துரை செய்ய சொல்லலாம்.

இவ்வாறு செய்தல் மட்டும் அந்த நல்ல வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்றாலும் அவர் பெற போகும் ஓட்டுகள் மற்ற கட்சிகளுக்கு சிறு பயத்தையாவது உண்டாக்கும். நாமும் நல்லது செய்தால்தான் இந்த வெற்றி நிரந்தரமாக கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரும்.

சில நேரங்களில் எந்த வேட்பாளரும் சரி இல்லாமல் இருக்கலாம். அவ்வாறான சமயங்களில் ஓட்டு சாவடிக்கு சென்று படிவம் எண் 49 'O' ஐ வாங்கி எந்த வேட்பாளருக்கும் நீங்கள் ஓட்டு போட விரும்பாததை பதிவு செய்யலாம்.

நாம் நம் நாட்டில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என மனதளவில் நினைத்தால் மட்டும் மாற்றங்கள் தானாக நிகழாது. அந்த மாற்றங்கள் நிகழ நம்மாலான பங்களிப்பையும் நாம் அளிக்கவேண்டியது மிக அவசியம்.
ஆகவே கண்டிப்பாக தேர்தலில் ஓட்டு போடுங்கள். மேலும் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் காசு பணம் வாங்காமல், ஜாதி மத அடிப்படையில்லாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டுப் போட சொல்லுங்கள். மாற்றங்கள் நிகழ நாமும் நமது பங்களிப்பைக் கொடுப்போம்.

No comments:

Post a Comment